“ஜல்லிக்கட்டு முதல் நிர்பயா வழக்கு வரை!” – நீதிபதி ஆர்.பானுமதி ஓய்வு

உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி பானுமதி ஓய்வு பெறுகிறார்.

இதையொட்டி நடைபெற்ற பிரிவுபச்சார விழாவில் பேசிய அவர், தாமதமான நீதியால் தனது குடும்பமும் பாதிக்கப்பட்டதாக உருக்கமாக தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள ஊத்தங்கரை எனும் கிராமத்தில் 1955-ம் ஆண்டு பிறந்து வளர்ந்தவர், நீதிபதி பானுமதி.

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். பின்னர், 1988-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இதனையடுத்து, 2003-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சுமார் 10 வருடங்கள் கழித்து 2013-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். பல்வேறு இடங்களில் நீதிபதியாகப் பணியாற்றிய பின்னர் 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆறாவது பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 

உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் நீதிபதி பானுமதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 30 ஆண்டுக்காலம் நீதிபதியாகப் பணியாற்றிய பானுமதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

நீதிபதி பானுமதி
நீதிபதி பானுமதி

முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூன்று பெண் நீதிபதிகளில் ஒருவரான பானுமதி தனது பிரிவு உபசார நிகழ்ச்சியில் பேசும்போது,“நான் பேருந்து விபத்து ஒன்றில் என் தந்தையை இழந்தேன். அப்போது எனக்கு 2 வயது. என் தாய் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், பல சிக்கல்களால் எங்களுக்கு அந்த இழப்பீடு கிடைக்கவில்லை.

நீதிமன்றம் விரைந்து செயல்படாமல் தாமதமாகச் செயல்பட்ட காரணங்களால் நாங்கள் பாதிக்கப்பட்டோம்” என்று வேதனையான நிகழ்வைப் பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்றைய நாளில் அனைவரும் வழக்குகள் அதிகம் நிலுவையில் இருப்பதைப் பற்றி பேசுகிறார்கள்.

ஆனால், நான் பாசிட்டிவான விஷயங்களையே பேச விரும்புகிறேன்.

அரசாங்கம் மற்றும் நீதித்துறை இந்த வழக்குகளை முடிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளன” என்று குறிப்பிட்டார்.

நீதிபதி பானுமதி தனது பிரிவு உபசார நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள், உடன் பணி செய்தவர்கள் மற்றும் ஊடகங்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும் என நம்புவதாகவும் பாதிப்பில் இருந்து மீண்டு இந்தியா இயல்புநிலைக்கு திரும்பவும் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார்.

இளம் வழக்கறிஞர்களுக்கும் அறிவுரை கூறினார்.

தன்னுடைய கடைசி வேலைநாளில் தலைமை நீதிபதிகளுடன் அமர்ந்தார். `

‘நீதிமன்றம் நல்ல நீதிபதி ஒருவரை இழக்கிறது. அவர் தனது நல்ல பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்’ என்று அவரது சக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதிபதி பானுமதி
நீதிபதி பானுமதி

இந்தியாவில் பரபரப்பாகப் பேசப்பட்ட பல முக்கிய வழக்குகளுக்கு நீதிபதி பானுமதி தீர்ப்பளித்துள்ளார்.

2012-ம் ஆண்டு நடந்த நிர்பயா கொலை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வுதான் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஜல்லிக்கட்டு, சேவல் மற்றும் கிடா சண்டை உள்ளிட்டவற்றுக்கு தடை விதித்தார்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கையும் இவர்தான் விசாரித்தார்.

அவருக்கு ஜாமீனும் வழங்கினார். மிகவும் பிரபலமான பிரேமானந்தா வழக்கிலும் இவர்தான் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்குகளால் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட இவர் நிர்பயா மற்றும் பிரேமானதா வழக்கு தீர்ப்புகளுக்காக மக்களிடமிருந்து பாராட்டும் பெற்றுள்ளார்.

தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை, வீரப்பன் கொல்லப்பட்ட வழக்கில் காவலர்களுக்கு பணிமூப்பு ரத்து உள்ளிட்ட பல அதிரடி தீர்ப்புகளையும் இவர் வழங்கியுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே