1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம்..!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

அந்தவகையில், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், விவசாயிகள் முழுமையான பலன்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தாண்டில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் முதல் கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் இன்று (23ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 25 ஆயிரம் புதிய மின் இணைப்புகளுக்கான ஆணையை விவசாயிகளுக்கு வழங்குகிறார். வரும் மார்ச் மாதத்திற்குள் மீதமுள்ள 75 ஆயிரம் இலவச இணைப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே