தலைநகர் தில்லியில் விவசாயிகளின் போராட்டம் 7-ஆவது நாளாக புதன்கிழமையும் நீடித்து வருகிறது. இதையடுத்து, தில்லியையொட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மத்திய அரசு கடந்த செப்டம்பரில் வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்து மூன்று சட்டங்களைக் கொண்டு வந்தது.

விவசாயிகள் உற்பத்தி வா்த்தகம் மற்றும் வா்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அவசரச் சட்டம் 2020, விவசாயிகள் ஒப்பந்தச் சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் (திருத்தம்) அவசரச் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டங்களை எதிா்த்து விவசாயிகள் தில்லி எல்லையில் தொடர் முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து விவசாயப் பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை விஞ்ஞான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அமைச்சர்கள் பியூஷ் கோயல், சோம் பிரகாஷ் உள்ளிட்டோரும், 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், “புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்க நிபுணர் குழுவை நியமிக்கலாம்’ என்று மத்திய அரசு தெரிவித்த யோசனையை விவசாயிகள் நிராகரித்ததால் விவசாயிகள் பிரச்னையில் இழுபறி நீடித்தது.

மேலும், “திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு எந்த முடிவையும் ஏற்கமாட்டோம். போராட்டம் தொடரும்’ என்றும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதையடுத்து எந்தவித முடிவும் எட்டப்படாமல் நாளை வியாழக்கிழமைக்கு (டிச.3) பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய வலியுறுத்தி தில்லி எல்லையில் 7-ஆவது நாளாக விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து தில்லியை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தால் தில்லியிலிருந்து பக்கத்து மாநிலங்களுக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே