இந்தியாவுக்கு 120 வெண்டிலேட்டர்களை நன்கொடையாக அளித்த பிரான்ஸ்!

இந்தியாவுக்கு 120 வெண்டிலேட்டர்களை நன்கொடையாக அளித்துள்ளது பிரான்ஸ் நாட்டு அரசு.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கடந்த ஒரு வாரமாகவே நாளொன்றுக்கு மட்டும் 40000 க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 47,703 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,83,156ல் இருந்து 15,31,669ஆக உயர்ந்துள்ளது.

அதே போல, நேற்று ஒரே நாளில் 654 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,193 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5,09,162 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 9,88,782 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்படைந்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரேசில்லுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை இந்தியா தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்களை நன்கொடையாக அளித்துள்ளது பிரான்ஸ்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சமீபத்தில் இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை அளிப்பதாகவும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த மருத்துவ உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் இந்தியாவுக்கு 50 ஒசைரிஸ்-3 வெண்டிலேட்டர்கள் மற்றும் 70 யுவெல் 830 வெண்டிலேட்டர்களையும் நன்கொடையாக அளித்துள்ளது.

பிரான்சின் நன்கொடையில் 50,000 உயர்தர கரோனா பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்டவைகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நன்கொடைகளை டெல்லியில் உள்ள இந்திய செஞ்சிலுவை பொது செயலாளரிடம் பிரான்ஸ் நாட்டு தூதர் ஒப்படைத்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே