ஆட்சியை பிடிப்பதற்காக முஸ்லிம்களை தூண்டிவிட்டு திமுக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்த விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்தது.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது 2021 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றாக வேண்டும் அப்படி வெற்றி பெற்றாக வேண்டும் என்று சொன்னால் சில பிணங்கள் விழுந்தாக வேண்டும்.
அவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் பரவாயில்லை கிறிஸ்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை அவர்களுக்கு தேவை பிணம்.
அந்த ஒற்றை காரணத்திற்காக எல்லோரையும் களத்தில் இறங்க சொல்லி உள்ளார்கள். அவர்களை நம்பி களத்தில் இறங்காதீர்கள் என அவர் பேசினார்.
மேலும் சில மத தலைவர்களால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மத பிரச்னை இருந்து கொண்டிருக்கின்றன.
இந்த மத தலைவர்கள் இதனை உணராவிட்டால் அந்த மதத்தை சேர்ந்த மக்களால் துரத்தி அடிக்கப்படும் காலம் விரைவில் வரும் என்று கூறினார்.