முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த் மகாராஷ்டிராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை காலை காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

அவருக்கு வயது 90. புணேவில் டிசம்பர் 31, 2017-இல் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் இணை அழைப்பாளர்களில் ஒருவராகப் பங்கேற்றவர்.

2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து விசாரணை நடத்திய குழுவின் ஒரு பகுதியாக இருந்தவர். நீதிபதி சாவந்த் இந்தியப் பத்திரிகைக் குழுவின்(பிடிஐ) தலைவராகவும் பணியாற்றினார்.

மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் உயிரிழந்தார் என்று அவரது மகள் சுஜாதா மானே தெரிவித்தார். அவரது இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

ஜூன் 30, 1930-இல் பிறந்த நீதிபதி சாவந்த் 1957இல் வழக்குரைஞராகச் சேர்ந்தார். பின்னர், 1973இல் மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 1989ஆம் ஆண்டு நீதிபதி சாவந்த் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 1995இல் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே