புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவால் உயிரிழப்பு

கரோனாவால் சிகிச்சையில் இருந்த முன்னாள் அமைச்சர் ஏழுமலை இன்று மரணமடைந்தார்.

புதுச்சேரியில் கடந்த 1998-ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஊசுடு தொகுதியில் தமாகா வேட்பாளராகக் களமிறங்கி ஏழுமலை வெற்றி பெற்றார்.

தொடர்ந்து, 2001-ல் நடந்த தேர்தலில் பு.ம.கா., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில், சுயேட்சையாக போட்டியிட்டு, எம்எல்ஏ ஆனார். பின், காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளித்து, பாசிக் சேர்மன் பதவியைப் பெற்றார்.

அடுத்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், திமுகவில் சேர்ந்து போட்டியிட்டார். ஆனால் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து கடந்த 2011-ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.

பங்கூரில் வசித்து வந்த அவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கரோனா தொற்று உறுதியானது.

அதைத்தொடர்ந்து அவர் உடல்நலம் சீராகாததால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

ஏற்கெனவே என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாலன் மரணத்தைத் தொடர்ந்து புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் கரோனாவால் மரணமடைந்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே