“வெள்ளையனே வெளியேறு” என முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனின் வரலாறு!!

பூலித்தேவன் வரலாறு:

பூலித்தேவன் நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன். இவனுடைய வீர வராலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத்தை ஒரு கலக்குக் கலக்கிய மாவீரன் பூலித்தேவனின் சாதனைகள் பற்றி இன்னமும் சரித்திர ஆசிரியரகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

இத்தனைய பாளையங்களில் ஒன்றுதான் நெற்கட்டான் செவ்வல் பாளையம். இந்திய விடுதலைப் போருக்கான முதல் குரல் இந்த பாளையத்திலிருந்து தான் ஒலித்தது. அந்த குரலுக்கு உயிர் கொடுத்தவரின் பெற்றோர்கள் பெயர் சித்திர புத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர்.

பூலித்தேவரின் பெற்றோர்கள் பெயர் சித்திரபுத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர். பூலித்தேவர் 1-9-1715இல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர், ‘காத்தப்பப் பூலித்தேவர்’ என்பதாகும். ‘பூலித்தேவர்’ என்றும் ‘புலித்தேவர்’ என்றும் அழைக்கலாயினர்.

சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி அளிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.

பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் அவருக்கு மிகுந்த விருப்பம் புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பமுண்டு. இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்வேர் என்றே அழைத்து வந்தனர். காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.

பூலித்தேவரின் வயதுக்கு மீறிய ஆற்றலைக் கண்டுதான் அவருடைய பெற்றோர்கள் துணிந்து அவரை அத்தனை இளம் வயதில் மன்னராக்கினர். மன்னரைப்போலவே நெற்கட்டான் செவ்வல் மக்களும் இந்த முடிவை வரவேற்றார்கள். பின்னர் பூலித்வேருக்கு திருமண ஏற்டபாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கை துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார்தான்.

கயல்கண்ணி நல்ல அழகி மட்டுமல்ல, வீர விளையாட்டுக்கள் விளையாடுவதிலும் பூலித்தேவருக்கு உற்ற துணையாக விளங்கியவர். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவரின் இல்லற வாழ்ககை கண்ட அவருடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்சியடைந்தார்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவசச்சி, சித்திர புத்திர தேவன் மற்றும் சிஞானப் பாண்டியன் என்று மூன்று நன்மக்கள் பிறந்தனர்.

பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது. இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடுகளும் உள்ளன.

விடுதலைப்போராட்டத்தில் புலித்தேவர்:

1750இல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றார் என ‘பூலித்தேவன் சிந்து’ என்ற கதைப்பாடல் கூறுகிறது. பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.

1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.

அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.

1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் புலித்தேவனிடம் தோற்றார்.

1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிப்வால் பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார். நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.

பூலித்தேவரின் இறப்பு:

பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும், அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் “பூலிசிவஞானம்” ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.

இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை இரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழ்நாட்டு அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே