இந்த ஆண்டில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 300 பேர் பலி

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இந்த ஆண்டில் முதல் முறையாக தினசரி கொரோனா பலி 300 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால், தொடர்ந்து 18வது நாளாக நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 62,714 பேர் புதிதாக வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல், ஒரே நாளில் 312 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த ஆண்டில் ஒரே நாள் பலி 300ஐ கடப்பது இதுவே முதல் முறை. மேலும், கடந்த 3 மாதத்தில் ஏற்பட்ட அதிகபட்ச தினசரி பலியும் கூட. கடைசியாக, கடந்தாண்டு டிசம்பர் 25ம் தேதி ஒரே நாளில் 336 பேர் பலியாயினர். தற்போது, நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 624 ஆகவும், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்து 552 ஆகவும் உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 310 ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் விகிதம் 94.58 ஆக சரிந்து வருகிறது.

மத்திய அமைச்சருக்கு தொற்று
மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் ரத்தன் லால் கட்டாரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது பற்றி நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே