ரஜினியை தொடர்ந்து Man VS Wild நிகழ்ச்சியில் அக்‌ஷய்குமார்…

பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து பாலிவுட் பிரபலமான நடிகர் அக்‌ஷய் குமாரும், மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ரஜினியை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரும் Man vs wild நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதற்கான படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சமீபத்தில் கர்நாடக மாநிலம் மைசூர் சென்றடைந்த அவர், அங்கிருந்து பந்திப்பூர் வனப்பகுதிக்கு சென்று அந்நிகழ்ச்சி குழுவினருடன் இணைந்துள்ளார்.

படப்பிடிப்பிற்காக வனத்துறை அளித்துள்ள அனுமதி ஜனவரி 30-ம் தேதியுடன் நிறைவடைவதால், குழுவினர் படப்பிடிப்பில் தீவிரம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.

இதே பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த இந்நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியப் பிரபலமாகிறார் அக்‌ஷய்.

முன்னதாக கடந்த வருடம் பிரதமர் மோடியும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் காட்டுத்தீக்கு வாய்ப்புள்ள இந்த காலகட்டத்தில் வனத்துறை எப்படி படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கலாம் என்று வன மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால், இதற்கு விளக்கமளித்துள்ள வனத்துறை, படப்பிடிப்புக் குழுவிற்கு தாங்கள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், குறிப்பாக வனவிலங்குகளையும், வன அலுவலர்களையும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும், அதேபோல் இரவு நேரங்களில் படம்பிடிப்பதையும், தீப்பற்றக்கூடிய பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என்றும், மின்சார ஜெனரேட்டர்களை கூட பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை படக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனை மீறும் பட்சத்தில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே