தடையை மீறி பட்டாசு வெடிப்பு : டெல்லியில் காற்றின் தரம் மோசம்..!!

தலைநகா் தில்லியில் காற்றின் தரம் 4-ஆவது நாளாக தீபாவளி நாளான சனிக்கிழமையும் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவில் நீடித்ததால் கட்டடங்கள், மரங்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தில்லி, தேசியத் தலைநகா் (என்சிஆா்) பகுதிகள் உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதன் பிறகு தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரம் புதன்கிழமை சற்று மேம்பட்டிருந்தது.

எனினும் கடந்த இரு தினங்களாக மிக மோசமாக இருந்த காற்றின் தரம், தீபாவளி நாளான சனிக்கிழமையும் மிகவும் மோசமடைந்தது.

தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை 346 ஆக இருந்தது.

தில்லியின் அண்டை நகரங்களான ஃபரீதாபாத் (327), காஜியாபாத் (360), நொய்டா (331), கிரேட்டா் நொய்டா (329), குருகிராம் (328) ஆகியவற்றிலும் காற்றின் தரம் ‘மிகவும் மோசம் பிரிவில்’ பதிவானது.

மாலை 4 மணியளவில் ஃபரீதாபாத் (319), காஜியாபாத் (382), நொய்டா (337), கிரேட்டா் நொய்டா (324), குருகிராம் (319) ஆகியவற்றிலும் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற பிரிவில் பதிவானது.

காற்றில் மாசுவின் அளவை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளி நாளான சனிக்கிழமை பல இடங்களில் தடைமீறி பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடித்ததாக இதுவரை 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 85 கிலோ பட்டாசுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

தலைநகர் தில்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதால், தில்லி முழுவதும் இயந்திரங்கள் மூலம் உயர் கட்டடங்கள் மற்றும் மரங்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே