சவுத்தாம்டனில் இறுதிப் போட்டி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதலுக்குத் தயார்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி சவுத்தாம்டன் நகரில் உள்ள ஹேம்ஷையர் மைதானத்தில நடத்த உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியா, நியூஸிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் இங்கிலாந்தில் கரோனா தொற்றுப் பரவல் ஆபத்து இருப்பதால் எங்கு நடத்துவது என்ற சிக்கல் நீடித்து வந்தது.

பாரம்பரியம் கொண்ட லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடத்துவது என முதலில் ஆலோசிக்கப்பட்டு, கரோனா வைரஸ் பரவல் காரணமாக முடிவு கைவிடப்பட்டது.

இந்நிலையில் ஐசிசி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடையே நடந்த ஆலோசனையின் முடிவில் சவுத்தாம்டனில் உள்ள ஹேம்ஷையர் மைதானத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் உலகத் தரம் வாய்ந்த பயிற்சிக்கான வசதிகள், பாதுகாப்பு வசதிகள் இருப்பதால் இங்கு நடத்துவது சிறந்தது என முடிவு செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் பரவல் இருந்த கடந்த ஆண்டே தி ஹேம்ஷையர், ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில்தான் போட்டிகள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாம் ஹாரிஸன் கூறுகையில், “உலகிலேயே பயோ-பாதுகாப்பு நிறைந்த கிரிக்கெட் மைதானம் ஹேம்ஷையர்தான். உயர்ந்த தரத்தில் சர்வதேசப் போட்டிகளை நடத்த அனைத்து வசதிகளும் உள்ளன.

கரோனா காலத்தில்கூட இங்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் போட்டி நடத்தப்பட்டது. ஆதலால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எந்தவித இடையூறும் இன்றி நடத்தப்படும். போட்டியைக் காண மிகவும் குறைந்த அளவிலான ரசிகர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

ஐசிசி பொதுமேலாளர் ஜெப் ஆல்ட்ரைஸ் கூறுகையில், “ஹேம்ஷையர் பவுலில் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப் போட்டியைச் சிறப்பாக நடத்துவோம் என நம்புகிறேன். விளையாடும் வீரர்களும், பார்வையாளர்களும் பாதுகாப்பாக, நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும். இரு சிறந்த அணிகள் டெஸ்ட் இறுதிப் போட்டியில் விளையாடுவதை ரசிகர்கள் பார்த்து மகிழக் குறைவான அளவில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே