தவண் பெஞ்ச்சில் உட்காரட்டும்; ரோஹித், கே.எல்.ராகுலைத் தேர்வு செய்யுங்கள்: விவிஎஸ் லட்சுமண் சொல்லும் காரணமென்ன

ஷிகர் தவண் பெஞ்ச்சில் உட்காரட்டும். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவுடன், கே.எல்.ராகுலைக் களமிறக்குங்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் ஆலோசனை தெரிவித்துள்ளார்

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 19 வீரர்கள் கொண்ட இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் ஒவ்வொரு இடத்துக்கும் 2 வீரர்கள் கடும் போட்டியளிக்கிறார்கள்.

இதில் குறிப்பாக தொடக்க வரிசைக்கு ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், இஷன் கிஷான் ஆகியோர் கடும் போட்டியளிக்கிறார்கள். 4-வது இடத்துக்கு சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், பந்துவீச்சில் ஹர்திக் படேல், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், சுழற்பந்துவீச்சில் ராகுல் சஹர், வருண் சக்ரவர்த்தி, சஹல், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் எனக் கடும்போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் ராகுலைக் களமிறக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

”ஷிகர் தவண் தற்போது உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவரை டி20 உலகக் கோப்பைக்கான ரிசர்வ் தொடக்க வீரராகவே வைத்திருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக தவணுடன், கே.எல்.ராகுல் களமிறங்கினார். இப்போது ரோஹித் சர்மா வந்துவிட்ட நிலையில் மீண்டும் தவண், ரோஹித் சர்மா கூட்டணியைக் களமிறக்குவது சரியான தேர்வு இல்லை.

யாரைத் தேர்வு செய்வது என்பது கடினமான கேள்விதான் என்றாலும், வலிமையான தொடக்கத்துக்கு கே.எல்.ராகுல், ரோஹித் சர்மாதான் சரியாக இருக்கும். ஷிகர் தவணை ரிசர்வ் ஓப்பனராகவே வைத்திருக்கலாம்

ரோஹித் சர்மாவைப் பொறுத்தவரை டி20, ஒருநாள் தொடரில் சிறந்த தொடக்க வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதிரடியான தொடக்கத்துக்கு ரோஹித் சர்மா, கே.எல். ராகுலுடன் சேர்ந்து களமிறங்குவதுதான் சரியானதாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக ராகுலின் தொடக்க ஆட்டம் பிரமாதமாக இருந்து வருகிறது.

ஐபிஎல் தொடரில் தவண் சிறப்பாக ஆடினார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சதம் அடித்தார். விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால், உலகக் கோப்பைப் போட்டிக்கு ரிசர்வ் ஓப்பனரை மனதில் வைத்து தவணைக் களமிறக்குவதைத் தவிர்க்க வேண்டும். இதில் ராகுல், ரோஹித் சர்மா யாரேனும் ஒருவர் ஃபார்மை இழக்கும் பட்சத்தில் அல்லது காயமடைந்தால் தவணைப் பயன்படுத்த வேண்டும்.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் மீண்டும் வந்திருப்பது அணியின் பந்துவீச்சை பலப்படுத்தும், இன்னும் வலிமையாக்கும். ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு பலத்தையும், துணிச்சலையும் அனைவரும் பார்த்திருப்போம்.

புவனேஷ்வர் உடல்நலம் தேறி வந்திருப்பது மகிழ்ச்சிதான். முக்கியமான பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமாருக்கு டி20 தொடர் முழுவதும் வாய்ப்பு வழங்காமல் 2 அல்லது 3 போட்டிகளில் மட்டுமே களமிறக்க வேண்டும். அடுத்ததாக நமக்கு உலகக் கோப்பை டி20 தொடர் நடக்க இருப்பதால், அதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.

இந்திய அணியில் பும்ராவைத் தவிர்த்து புதிய பந்தில் டெத் பவுலிங் வீசவும், துல்லியமாக ஸ்விங் செய்யவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் யார் எனக் கேட்டால் புவனேஷ்வர் குமார்தான். ஆதலால், அவருக்கு முழு பளு அளிக்காமல் 3 போட்டிகளில் மட்டுமே களமிறக்க வேண்டும். அக்டோபர், நவம்பரில் நடக்கும் உலகக் கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவை அணி நிர்வாகம் எடுக்க வேண்டும்”.

இவ்வாறு லட்சுமண் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே