கு.க. செல்வம் போன்று பாஜகவுக்கு தாவும் திமுக முக்கிய பிரமுகர்கள்..? ‘ஜெர்க்’ தரும் பொன்னார்..!

சென்னை: கு.க. செல்வம் போன்று மேலும் பலர் திமுகவில் இருந்து பாஜகவில் இணைய உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

தமிழக அரசியலில் இப்போது ஆளும்கட்சியின் செயல்பாடுகளை காட்டிலும் திமுகவுக்குள் நடக்கும் உட்கட்சி மோதல்களே பெரும் விவாதங்களாக மாறி உள்ளன. அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு பாஜகவில் ஐக்கியமானவர் வி.பி. துரைசாமி.

திமுக மீது புழுதி வாரி தூற்றிவிட்டு, தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று அக்கட்சியின் தலைவர் எல். முருகனை பார்த்தார். மாற்று கட்சியில் உள்ளவர்களை சந்திப்பதில் என்ன தவறு என்றார். திமுக அவரை கட்டம் கட்டி அனுப்பியது.

அதுபோன்று மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியர் கு.க. செல்வம். திமுக தலைவர் ஸ்டாலின் எம்எல்ஏவாக இருந்த ஆயிரம் விளக்கு தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ. 2021ம் ஆண்டு தேர்தலில் உதயநிதி ஸ்டாலினுக்காக இந்த தொகுதி ரிசர்வ் செய்யப்பட்டு உள்ளதாக இன்றும் திமுகவில் ஒரு பேச்சு உண்டு.

அந்த தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவான கு.க.செல்வம் டெல்லி சென்றார். பாஜக தலைவர் நட்டாவை சந்தித்தார். அப்படியே சென்னை வந்த அவர், நேராக கமலாலயம் சென்று திமுகவுக்கு எதிராக பேட்டியளித்தார். குடும்ப அரசியல் அக்கட்சியின் பிரதானம் என்றார். இந்த விவகாரம் திமுகவுக்கு ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியை தர, சஸ்பென்ட் நடவடிக்கை பாய்ந்தது. கடைசியில் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

பதவிக்காக தான் பாஜக பக்கம் போவதாக கடந்த வாரம் பேட்டியளித்த செல்வம், இன்று தமது நீக்கத்துக்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் என்று கூறி உள்ளார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, திமுகவில் இருந்து கு.க.செல்வம் போன்று மேலும் பல முக்கிய பிரமுகர்கள் அங்கிருந்து கிளம்பி பாஜக வருவார்கள் என்று கிலி ஏற்படுத்தி உள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.

கு.க.செல்வம் நீக்கம் குறித்து பேசுகையில் அவர் இதை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது: திமுகவில் உதயநிதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அந்த கட்சியில் மற்றவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அதன் காரணமாக மேலும் பலர் அக்கட்சியில் இருந்து வருவார்கள் என்றும் கூறி உள்ளார்

அவரின் இந்த கருத்தை அவ்வளவு எளிதாக கருதி விடமுடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். காரணம் சில நாட்களுக்கு முன்பு பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் எதிர்வரும் 2021ம் ஆண்டு அரசியலில் போட்டி என்று அக்கட்சியினர் கூறி கருத்துகளே காரணம்.

வலுவான திமுகவை பலவீனப்படுத்தி, தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வந்த தாமரையை மலர வைக்கும் முனைப்பில் அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பதை தான் சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன என்றும் அவர்கள் கூறி உள்ளனர். இந்த தகவல் அறிந்த திமுகவின் முக்கிய பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது தான் தற்போதைய நிலவரம்.

AKR

Having 20 years experience in the field of Journalism in various positions.

AKR has 46 posts and counting. See all posts by AKR

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே