நான்கு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் அட்டை பொருத்த டிசம்பர் 31ஆம் தேதி வரை வழங்கிய காலக்கெடுவை 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதிவரை மத்திய இந்திய அரசு நீட்டித்திருக்கிறது.

அதன் பிறகு இந்தியா முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பணம் செலுத்தாமல் மின்னணு முறையில் சுங்கவரிகட்டணத்தை செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்றும்; இந்த விதியை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் பணப்பரிமாற்றத்தை தவிர்க்க, இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலமாக கொண்டுவரப்பட்ட திட்டம் Fastag.

இந்த Fastag – வசதி உங்களின் வாகனத்தில் எப்படி செயல்படும் என்பது பற்றிய 10 முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.

• வாகன உரிமையாளர்கள், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் இருக்கும் Fastag – ஸ்டிக்கர் வழங்கும் அதிகாரிகள்/ஏஜண்டுகளின் உதவியோடு வாகனத்தில் Fastag ஸ்டிக்கரை பெற்று வாகனங்களில் ஒட்டிக் கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், அமேசான், பேடிஎம் போன்ற ஆன்லைன் செயலிகள் வாயிலாகவும் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை வாங்கி அதனுடன் உங்களுடைய வாகன பதிவு எண், செல்பேசி எண் ஆகியவற்றை வங்கிக் கணக்குடனோ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது யுபிஐ பணப்பரிமாற்ற செயலியுடனோ ஆன்லைன் மூலம் இணைத்துக் கொள்ளலாம்.

• Fastag ஸ்டிக்கரில் உள்ள பார்கோடில் ரேடியோ அலைவரிசை (Radio Frequency Identification ) எண்கள் கோடிங் செய்யப்பட்டிருக்கும். இதனால், Fastag ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வரும்போது, அந்த சாவயில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கேனர் கருவி, வாகனத்தில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்து அதனுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்கிறது.

• தனிநபர், Fastag – ஸ்டிக்கரை தங்களின் வாகனத்தின் முன் பக்க கண்ணாடியில் பார்க்கும் விதமாக ஒட்டியிருக்க வேண்டும். இந்த ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை பெற வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், வாகன உரிமையாளரின் புகைப்படம், வீட்டு முகவரி மற்றும் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், பான் கார்ட், பாஸ்போர்ட், ஆதார் கார்ட் ஆகிய அடையாள அட்டைகளை இதற்கு பயன்படுத்தலாம்.

• வாகன ஓட்டி, ஒவ்வொரு சுங்கச்சாவடியை கடக்கும் போதும், எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ள, Fastag- கணக்குடன் இணைக்கப்பட்ட செல்பேசிக்கு குறுஞ்செய்திகள் வரும்.

இதன்மூலம், அந்த கணக்கில் இன்னும் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அவர்களால் அறிய முடியும்.

• கணக்கில் பணம் குறைந்து விட்டால், அதில் பணத்தை ரீசார்ஜ் செய்ய ஆன்லைன் வசதி உள்ளது. இதற்கு டெபிட் கார்ட் அல்லது கிரெடிட் கார்டை வாகன உரிமையாளர் பயன்படுத்தலாம்.

• இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணையதள தரவுகளின்படி இந்தியா முழுவதும் அந்த ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 562 சுங்கச்சவடிகள் உள்ளன. இது தவிர தனியார் நிறுவன கூட்டுடன் அரசு இயக்கி வரும் சுங்கச்சாவடிகளும் உள்ளன.

இதில் கிட்டத்தட்ட எல்லா சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்ட் டேக் கட்டணமில்லா சுங்க வசூலிப்பு முறை அமல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும், கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடியை கடக்கும் வாய்ப்பு வரும் பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள், அவற்றுக்கென வரையறுக்கப்பட்ட பாதையில் பயணம் செய்தால், கட்டணம் செலுத்தக் கூடிய வாகன வரிசையில் நிற்காமல் நேரத்தை மிச்சப்படுத்தி பயணம் செய்யலாம்.

• Fastag- ஸ்டிக்கர் இல்லாத ஒரு வாகனம், Fastag-பாதையில் சுங்கச்சாவடியை கடக்க முயன்றால், அதற்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஃபாஸ்ட் டேக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

• உங்களின் Fastag- ஸ்டிக்கர் காணாமல் போனாலோ, சேதம் அடைந்தாலோ உடனடியாக அதை உங்களுக்கு பெற்றுத்தந்த ஏஜெண்டிடம் தெரிவிக்க வேண்டும்.

இதன்மூலம், தங்களுக்கென புதிய கணக்கை உருவாக்கிக்கொடுக்கும் அந்த ஏஜெண்ட் நிறுவனம், பழைய கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு இருந்ததோ, அதையும் புதிய கணக்கில் சேர்க்கும் என்கிறது Fastag நிறுவனம்.

• ஒரு Fastag ஸ்டிக்கரை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.

• ஒரு Fastag- கணக்கில் குறைந்த பட்சம் ரூ. 100/- இருக்க வேண்டும்.

தனி நபராக இருந்தால், ப்ரீபெய்டு ஃபாஸ்ட்டேக் கணக்கில் ரூ. 10 ஆயிரம் வரையும்; நிறுவனம் சார்ந்த வாகனமாக இருந்தால் அதன் ஃபைஸ்ட் டேக் கணக்கில் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரையும் வைத்திருக்க முடியும்.

யாருக்கு விலக்கு?

தேசிய நெடுஞ்சாலை விதிகளின்படி குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், கேபினட் அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, மத்திய இணை அமைச்சர், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர், முப்படை தலைமைத் தளபதி, சட்டமன்ற சபாநாயகர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (டெல்லி மற்றும் அவரதுசொந்த தொகுதி என இரு ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்படும்), ராணுவ துணைத் தளபதி, மாநில அரசு தலைமைச் செயலாளர், மத்திய அரசுத் துறைகளின் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (மாநிலத்தில் பயன்படுத்த ஒரு ஸ்டிக்கர் வழங்கப்படும்), காவல்துறை, தீயணைப்பு, அவசர ஊர்தி வாகனங்கள், மத்திய ஆயுதப்படைகள், பாதுகாப்புத்துறை, அரசுப்பணியில் உள்ள அரசுத்துறை வாகனங்கள், மாற்றுத்திறனாளி பயன்படுத்தும் வாகனங்கள் (ஒரு ஸ்டிக்கர் வழங்கப்படும்), பரம் வீர் சக்ரா, அசோக சக்ரா, மகா வீர் சக்ரா, கீர்த்த சக்ரா, வீர் சக்ரா, செளரிய சக்ரா ஆகியவை வழங்கி கெளரவிக்கப்பட்ட அதற்கான அடையாள அட்டையுடன் இருப்பவர்கள், மாவட்ட ஆட்சியர், சீருடையில் உள்ள காவல்துறை, மத்திய துணை ராணுவப்படையினர் செல்லும் வாகனங்கள், இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆய்வுப்பணி வாகனங்கள் ஆகிய பிரிவுகளுக்கு ஃபாஸ்ட் டேக் கட்டணம் செலுத்துதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே