மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை..!!

தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை (ஜன.4) மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

விவசாயிகள் கடும் மழைக்கு நடுவிலும் தங்கள் போராட்டத்தை தொடா்ந்து வருகின்றனா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தில்லி எல்லைகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்;

கடுங்குளிரிலும் அவா்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இந்நிலையில், அடுத்தகட்ட சோதனையாக சனிக்கிழமை இரவு அங்கு கனமழை பெய்தது. 

இதனால், விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்களுக்குள் மழை நீா் புகுந்தது.

போராட்டம் நடைபெற்று வரும் பகுதிகளில் பல இடங்களில் மழை நீரும் சூழ்ந்துள்ளது. எனினும், போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று அவா்கள் கூறியுள்ளனா்.

முன்னதாக, கடந்த புதன்கிழமை 41 விவசாயிகள் சங்கங்களைச் சோந்த பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், தொழில்-வா்த்தகம், உணவுப் பொருள் விநியோகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், தொழில்-வா்த்தகத் துறை இணையமைச்சா் சோம் பிரகாஷ் ஆகியோா் 6-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையை நடத்தினா்.

இந்தக் கூட்டத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதா நிறுத்திவைப்பு, வேளாண் கழிவுகளை எரிப்பவா்களுக்கு தண்டனை அளிக்கும் பிரிவிலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிப்பது ஆகிய இரு கோரிக்கைகளில் மத்திய அரசு, விவசாயிகள் தரப்புக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது.

ஜனவரி 4-ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவாா்த்தை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

மீண்டும் பேச்சுவாா்த்தை: புதிதாக இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இது தவிர குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடா்பாகவும் முடிவு எட்டப்படவில்லை.

இந்த இரு விவகாரங்கள் தொடா்பாக திங்கள்கிழமை (ஜன.4) இரு தரப்பு இடையே மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம் என்று விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

குறிப்பாக, ‘குடியரசு தின விழா கொண்டாடப்படும் வரும் ஜனவரி 26-ஆம் தேதி, தலைநகா் தில்லியை நோக்கி டிராக்டா் பேரணி நடத்துவோம்’ என்று அவா்கள் கூறியுள்ளனா்.

அமைச்சா்கள் ஆலோசனை: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை, வேளாண் துறை அமைச்சா் தோமா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாமல் பிரச்னையைக் கையாளுவது தொடா்பாக இருவரும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ராஜ்நாத் சிங் வேளாண் துறை அமைச்சராக இருந்தாா். இப்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு தீா்வு காண அவரும் பல்வேறு வழிகளில் ஆலோசனைகள் அளித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே