வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் 3வது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர்.

பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகரை நோக்கி படையெடுத்து வருவதால் பதற்றம் நீடிக்கிறது.

விவசாயிகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதிலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, 27, 28ம் தேதிகளில் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை பஞ்சாப் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

இதற்காக நேற்று முன்தினம் டெல்லியை நோக்கி பஞ்சாப், ஹரியானா  விவசாயிகள் ஆயிரக்கணக்கில் புறப்பட்டனர்.

அவர்களை எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர்.

எனினும் கலைந்து செல்ல மறுத்து விவசாயிகள் 2வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

விடாப்பிடியாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்ததால் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் காவல்துறை டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதித்தது. இந்த நிலையில், தொடர்ந்து 3வது நாளாக புராரியில் உள்ள நிரான்காரி மைதானத்தில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

மைதானத்தில் இருந்தவாறு மத்திய அரசை கண்டித்து மேளம் தட்டி, பாட்டு பாடியும் முழக்கங்களை எழுப்பியும் விவசாயிகள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் கைவிடப்படாது என்று திட்டவட்டமாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பஞ்சாப், ஹரியானா விவசாயிகளோடு, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்தும் போராட்டத்தில் பங்கேற்க டெல்லியை நோக்கி விவசாயிகள் பயணிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகரை நோக்கி படையெடுப்பதால் பஞ்சாப், ஹரியானா போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தை கைவிடும் படி கேட்டுக் கொண்ட மத்திய வேளாண்துறை அமைச்சர் வரும் 3ம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே