டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 8.36 ரூபாய் குறைப்பு – அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 16.65 சதவீதமாக குறைக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டீசல் மீதான வாட் வரி 30 சதவீதத்திலிருந்து 16.75 சதவீதமாகக் குறைக்க, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதன்மூலம், டெல்லியில் டீசல் விலையில் ரூ.8.36 காசுகள் குறையும் என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமாக உள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்தார்.

டீசல் விலை குறைக்கப்பட்டதால் டெல்லியின் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என தெரிவித்தார்.

மேலும் மக்களின் ஒத்துழைப்புடன் டெல்லியின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே