சென்னையில் தொழிலதிபர் தன்ராஜ் கோச்சாருக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தன்ராஜ் கோச்சாருக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனம், வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை வேப்பேரி, எழும்பூர், பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலை உள்பட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வட்டிக்கு பணம் கொடுத்து நிலங்களை அபகரித்ததாக தனியார் நிறுவனம் ஒன்றின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அமலாக்கத்துறையிடம் புகார் அளித்திருந்தார்கள்.

தனியார் நிறுவனம் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து சி.ஆர்.பி.எஃப் மற்றும் காவல்துறையினரின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கு பின்னர் இதுகுறித்தான தகவல்கள் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே