சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு 10,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையிலான புதிய சட்டம் தற்போது அமல்படுத்தப்படாது என கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் காவல்துறை சட்டப் பிரிவு 118-ல் காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் 118 ஏ என்ற பிரிவு புதிதாக இணைத்து அம்மாநில அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் படி உள்நோக்கத்துடன் சமுக வலைதளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினால், அல்லது அவதூறு தகவலை உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் பரப்பினால் உரிய நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

மேலும் அவதூறு பரப்பிய நபர்களுக்கு 10,000 ரூபாய் அபராதமும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும் என அந்த அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கேரள அரசின் இந்த அவசர சட்டத்துக்கு காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது பத்திரிக்கை சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் பரிக்கும் செயல் எனவும் விமர்சித்துள்ளன.

மேலும் இந்த சட்டத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ள நிலையில் காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் அவசர சட்டம் தற்போது அமல்படுத்தப்படாது என அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற சிபிஐ கட்சியின் மாநில செயலகக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் அவசர சட்டத்தை அமல்படுத்த கேரள அரசு விரும்பவில்லை என தெரிவித்தார்.

திருத்தம் அறிவிக்கப்பட்டதன் மூலம், பல்வேறு தரப்பிலிருந்து வெவ்வேறு கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

எல்.டி.எஃப்-ஐ ஆதரிப்பவர்களும், ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக நிற்பவர்களும் இந்தத் திருத்தம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், திருத்தப்பட்ட சட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை.

மாநில சட்டசபையில் விரிவான விவாதத்திற்குப் பிறகும், அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைக் கேட்ட பின்னரே மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே