கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த முதியவர் மாயம் – காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் மாயமான விவகாரத்தில் பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த ஆதிகேசவன் (72) என்பவர் கடந்த ஜூன்11ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவரை முதலில் கிண்டி ஸ்கிரீனிங் சென்டர் அனுப்பிய சுகாதாரத்துறை அதிகாரிகள், பின்னர் மருத்துவர்களின் அறிவுரைப்படி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவரது பரிசோதனை முடிவுகள், பரிந்துரை, சிகிச்சை குறித்த ஆவணங்களை, ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் உறவினர்கள், கீழ்பாக்கம் மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது, அவரை அங்கு அனுமதிக்கவில்லை என தெரிந்தது.

முதியவர் ஆதிகேசவனிடம், உறவினர்கள் மொபைல் போன் கொடுத்து அனுப்பாததால், அவர் எங்கு இருக்கிறார் என உறவினர்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை.

இதனையடுத்து கடந்த 23ம் தேதி ஆதிகேசவனின் மகன் மணிவண்ணன் தனது தந்தை காணவில்லை; மீட்டு தர வேண்டும், என கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதன் பின்னர் விசாரணை நடத்திய போலீசார், ஆதிகேசவன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இடம் இல்லாததால், அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பியதாக மருத்துவமனை ஆவணங்களில் பதிவு இருந்ததை கண்டறிந்தனர்.

ஆனால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், அவர் இல்லையென தெரிந்தது. அங்குள்ள ஆவணங்களிலும், அவர் பெயர் பதிவாகவில்லை.

இதனிடையே கீழ்ப்பாக்கம் போலீசார் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஜூன் 11ம் தேதி ஆதிகேசவன் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து வழக்கு விசாரணை சென்னை பூக்கடை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, முதியவர் ஆதிகேசவனின் மற்றொரு மகனான துளசிதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இன்று நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், முதியவர் மாயமான விவகாரம் தொடர்பாக பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீது தனி கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டியதும், உரிய சிகிச்சை அளிக்க வேண்டியதும் அரசு அதிகாரிகளின் முக்கிய கடமை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே