நரம்பு தளர்ச்சி பிரச்சனைக்கு முன்னோர்கள் பயன்படுத்திய சூப்பர் மருந்து என்ன தெரியுமா?

முன்னோர்கள் நீண்ட காலத்துக்கு வயதான தோற்றத்தை பெறாமல் இளமையாகவே இருந்தார்கள். குறிப்பாக தள்ளாத வயதிலும் தளராமல் இருந்தார்கள். இதற்கு காரணம் அவர்கள் மூலிகைகளை உணவாக மாற்றிகொண்டதுதான். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் மட்டும் அல்லாமல் மனமும் ஒத்துழைக்க வேண்டும். உடலின் ஆரோக்கியம் மன ஆரோக்கியத்தை பொறுத்தே அமைந்திருக்கிறது. இரண்டுமே சீராக இருக்கும் பட்சத்தில் உடல் வலுவும் குறையாமல் இருக்கும். அதற்கு முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்களில் முக்கியமானது இந்த அமுக்கரா கிழங்கு. இது குறித்து அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
​அமுக்கரா கிழங்கு பொடி
அமுக்கராங்கிழங்கு சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் கை வைத்தியத்திலும் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. மலைப்பகுதிகளில் காணப்படும் சிறு செடி வகை. இதிலும் சிறிய வகை கிழங்கு நாட்டு இனம் என்றும், பெரிய கிழங்கு வகை சீமை இனம் என்றும் அழைக்கப்படுகிறது.

உடலுக்கு இனிமையான புத்துணர்ச்சி தரும் இவை சுவையில் கசப்பு தன்மை கொண்டது. அமுக்கராங்கிழங்கு பொடியை வாங்கி வைத்துகொண்டால் போதும். இவை உலர்த்திய பொடியும் கிடைக்கும். அமுக்கராங்கிழங்கு அப்படியே பச்சையாகவும் கிடைக்கவும். பயன்படுத்துவதற்கு ஏதுவாக எப்படி தேவையோ அப்படி வாங்கி கொள்ளலாம்.

​நரம்புத்தளர்ச்சி
உண்மையில் நரம்புத்தளர்ச்சி என்பது நரம்புகள் தளர்வதை குறிப்பிடுவது அல்ல. மூளையிலிருந்து கட்டளைகளை உறுப்புகளுக்கு எடுத்து செல்லும் நரம்புகள். மயலின் என்னும் வேதிப்பொருள் சூழந்த லட்சக்கணக்கான சின்னச் சின்ன நரம்புகள் பெரிய நரம்பாக தசைகளில் ஊடுருவி இருக்கும். இவை மூளையின் கட்டளைகளை உடல் உறுப்புகளுக்கு எடுத்து செல்வதில் தொய்வு உண்டாகும். இதைத்தான் நாம் நரம்புத்தளர்ச்சி என்கிறோம். இந்த பிரச்சனை இருப்பவர்கள் அமுக்கராங்கிழங்கை கொண்டு சரிசெய்துகொள்ளலாம்.

காலையும் மாலை வேளையிலும் காபி, டீக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் அமுக்கராங் கிழங்கு பொடியில் மூன்று பங்கு கற்கண்டு சேர்த்து பசுவின் பாலில் கலந்து குடித்து வர வேண்டும். இதனால் இந்த பிரச்சனை குறையும். உடலுக்கு வலிமையும் கிடைக்கும்.

​உடல் பலவீனம்
உடல் பலவீனமாக இருப்பவர்கள் அனைத்து வயதினரும் உடலுக்கு வலு கொடுக்க அமுக்கராங்கிழங்கு எடுத்துகொள்ளலாம். இந்த பொடியை நெய்யில் கலந்து ஒரு மண்டலம் வரை சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் போகும். உடல் சருமம் பொலிவு கிடைக்கும். ஆயுள் நீடிக்கும். வளரும் பிள்ளைகளுக்கு 2 சிட்டிகையை நெய்யில் கலந்து கொடுக்கலாம். பெரியவர்கள் அரை டீஸ்பூன் அளவு நெய்யில் குழைத்து சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். வளரும் பிள்ளைகள் பசியின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டால் தேனில் கலந்து கொடுத்தால் பசியின்மை பிரச்சனை படிப்படியாக குறையும்.

​வலி வீக்கத்துக்கு நிவாரணி
தசை வலி, இடுப்பு வலி, கெண்டைக்கால் வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இம்முறை பலன் தரும். நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் அமுக்கிராங்கிழங்கை பச்சையாக வாங்கி வந்து பசும்பால் விட்டு மைய அரைக்கவும். அதை சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க வைத்து வலி, வீக்கம் இருக்கும் பகுதியில் தடவி வந்தால் வலி குறையும். தலைவலிக்கு பற்று போடும்போது சுக்குடன் அமுக்கிராங் கிழங்கையும் கலந்து வெந்நீர் விட்டு பற்று போட்டால் தலைவலி பெருமளவு குறையும்.

​இளமையை தக்க வைக்க
உடல் ஆரோக்கியத்துக்கு வலு கொடுக்கும் சத்து கஞ்சி தயாரிப்பில் அமுக்கராங் கிழங்கு பொடி சேர்த்து குடித்து வந்தால் இழந்த இளமை மீண்டும் திரும்பும். ஆண்களுக்கு பிரத்யேகமான அமுக்கராங் சூரணத் தயாரிப்பும் உண்டு இது குறித்து தனியாக பார்க்கலாம். அமுக்கராங் கிழங்கு தான் அஸ்வகந்தா என்றழைக்கப்படுகிறது.
இவை இல்லறத்த்துக்கு உதவும் இயற்கை வயாகரா என்றும் அழைக்கிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இவை மன அழுத்தம் நீக்கும் அற்புத மூலிகை என்றும் அழைக்கலாம். இது குறித்து முன்னரே பார்த்திருக்கிறோம். அதையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே