காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள செல்ஃபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பூந்தமல்லியில் தங்கவைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஃபுட் பாய்சன் ஆகி 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை எனப் பல இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் சிகிச்சை முடிந்து திரும்பிய நிலையில், எட்டு பெண்களுடைய நிலை என்னவென்று தெரியவில்லை. இதனைக் கண்டித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஏழு மணி நேரமாக இந்தப் போராட்டம் நடந்துவருகிறது. இந்தப் போராட்டம் காரணமாக 5 கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் நிற்கின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிலிருந்து அனைத்து அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்டுவரும் பெண்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இதில் சமரசம் எட்டப்படவில்லை. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பாக, செங்கல்பட்டு சாலையில் இருக்கக்கூடிய புளியம்பாக்கம் என்ற இடத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், தாம்பரம் செல்லும் வழியில் உள்ள வடகால் எனும் பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
‘தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இந்தத் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவருகிறோம். எங்களைப் பல்வேறு பகுதியில் இருக்கும் விடுதிகளில் தங்கவைத்திருக்கிறார்கள். எங்களுக்கு முறையான உணவு, மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. எங்களைக் கொத்தடிமை போல் நடத்திவருகிறார்கள். சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் விடுப்பு கொடுக்க மறுக்கிறார்கள்’ என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறிய ஆட்சியர் ஆர்த்தி, சிகிச்சை பெற்றுவரும் பெண்களிடம் வீடியோ காலில் பேசினார். ஆனாலும் அங்கிருந்த பெண்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ”நீங்க உங்க ஃபிரண்ட்ஸ்க்காகத்தான போராட்டம் பண்ணீங்க. அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. பப்ளிக்கிற்கு எவ்வளவு இடையூறு ஏற்படுத்தியிருக்கீங்க தெரியுமா? நியூஸ் பாத்தீங்களா? சரி, சரி விட்டுடுங்க… விஷயம் முடிஞ்சிருச்சு” என்றார்.