முதல்வர் பழனிசாமி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்..!!

”விவசாயி என்று சொல்லும் முதல்வர் பழனிசாமி பணத்தையும், ஊழலையும் தான் அறுவடை செய்கிறார்,” என சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடந்த தமிழகம் மீட்போம் காணொலி பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 108 இடங்களில் திமுக சார்பில் தமிழகம் மீட்போம் காணொலி பிரச்சாரக் கூட்டம் நடந்தது.

காரைக்குடியில் நடந்த கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

இதில் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் தமிழுக்கு சோதனை, தமிழருக்கு வேதனையாக உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்தத் தேர்தல் நமக்கு முக்கியமானது.

திமுக ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அதிமுக ஆட்சியில் ஏதாவதொரு திட்டம் கொண்டு வந்தார்கள் என சொல்ல முடியுமா?

தான் விவசாயி என முதல்வர் பழனிசாமி, பணம், ஊழலை தான் அறுவடை செய்கிறார். தமிழக ஆளுநரிடம் ஊழல் பட்டியலைக் கொடுத்துள்ளோம். இது முதல் பட்டியல் தான்.

இந்தப் பட்டியல் தொடரும். ஏற்கனவே டெண்டர் மூலம் அரசு பணத்தை அவரும், அவரது உறவினர்களும் முறைகேடு செய்தது குறித்து வெளிப்படையாக கூறி வந்தேன்.

அதற்கு அவர் நேரடியாக பதில் சொல்லவில்லை. அவர் பதில் சொல்லத் தயாராக இல்லாவிட்டாலும் மக்கள் தண்டனை தர தயாராக உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வமும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.

அவர் மட்டுமின்றி அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, காமராஜ், ஜெயக்குமார், உதயக்குமார் உள்ளிட்டோரும் ஊழல் செய்துள்ளனர். அந்த ஆதாரத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம்.

மத்திய அரசு கொண்டு வந்த சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்தது.

இதனால் சிறுபான்மையினர் குறித்து பேச அதிமுகவிற்கு அருகதை இல்லை.

தமிழகத்தில் முதன் முதலில் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தவர் எம்ஜிஆர்.

அதை ரத்து செய்தது கலைஞர் ஆட்சி. பழனிசாமி தனது பதவியை காப்பற்றிக் கொள்ள பாஜக காலடியில் விழுந்து கிடக்கிறார்.

சொந்தக் கட்சியிலேயே செல்வாக்கு இல்லாத பழனிசாமி, தான் முதல்வராக இருப்பதைப் பார்த்து இந்தியாவே ஆச்சரியப்படுவதாகக் கூறுகிறார்.

உழவர்களே இல்லாத இந்தியாவை உருவாக்க பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

அதை விழுந்து, விழுந்து பழனிசாமி ஆதரிக்கிறார். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை நமது போராட்டம் தொடரும், என்று பேசினார்.

தொடர்ந்து கே.ஆர்.பெரியகருப்பன் 502 மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கினார். அதில் ரூ.10 ஆயிரம் ரொக்கம், வேட்டி (அ) சேலை, சால்வே, மெடல் போன்றவை இருந்தன.

முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், நகரச் செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே