பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலையும் திரைப்பட நடனக் கலைஞர் ஹுசைனும் 2017 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்கள்.

காதலர் ஹூசைனைத் திருமணம் செய்ய தன்னுடைய தந்தை சம்மதிக்காததால் திடீரென பதிவுத் திருமணம் செய்ய நேர்ந்தது என்று ட்விட்டரில் கூறினார் மணிமேகலை.

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் ஒரு பதிவு எழுதினார் மணிமேகலை. அவர் கூறியதாவது:

அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள். முன்னாடி எல்லாம் நான் என் நண்பர்களிடம் ரமலானுக்கு பிரியாணி கேட்பேன். இப்போது எல்லோரும் என்னிடம் பிரியாணி கேட்கிறார்கள். ஒரே நகைச்சுவையாக உள்ளது என்று எழுதினார். இதனுடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்தார்.

இதற்கு ஒருவர் மணிமேகலையைக் கடுப்பேற்றும் விதத்தில் எதிர்வினை செய்தார். எப்படியோ ஒரு வழியாக மதம் மாற்றி விட்டான். இதற்குப் பெயர் தான் லவ் ஜிகாத் என்றார்.

அந்த ட்வீட்டைப் புறக்கணிக்காமல் தன் கணவரை விமர்சித்தவருக்குப் பதிலடி கொடுத்துள்ளார் மணிமேகலை.

அவர் கூறியதாவது:

ரமலான் வாழ்த்து சொல்வதற்கு மதம் மாறிவிட்டுத் தான் சொல்லணுமா? யாரும் இங்கு மதம் மாறவில்லை. ஹூசைன் என்னுடன் கோயிலுக்கு வருவார். நாங்கள் ரமலானும் கொண்டாடுவோம்.

நாங்கள் இதில் தெளிவாக உள்ளோம். உங்கள் குழப்பங்களை இங்கு கொண்டு வராதீர்கள் என்றார்.

திருமணம் நடைபெற்ற சமயத்திலும் இதுபோன்ற விமரிசனங்களை அவர் எதிர்கொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு மணிமேகலை மதம் மாற முடிவெடுத்துள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. 2017 டிசம்பரில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மணிமேகலை அளித்த பேட்டியில் கூறியதாவது:

எங்கள் திருமணச் செய்திக்கு நண்பர்கள் மட்டுமல்லாமல் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். மத ரீதியிலான விவாதங்களும் நடைபெற்றுள்ளன.

ஓர் அக்கறையில்தான் இப்படிக் கேட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் மதம் மாறவேண்டும் என்கிற எண்ணம் என்னிடம் இல்லை.

ஹுசைனும் அவர்களது குடும்பத்தினரும் இதுகுறித்து என்னை வற்புறுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் கோயிலுக்குச் செல்லும்போது ஹுசைன் எனக்குத் துணையாகப் பலமுறை வந்துள்ளார்.

அவர் மேற்கொள்ளும் மதச் சேவைகளும் எனக்கு உடன்பாடுதான். என் பெற்றோர் அழகான பெயரை எனக்குச் சூட்டியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் அதை மாற்றிக்கொள்ளமாட்டேன் என்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே