ஐ.பி.எல் 2021 தொடரில் பங்கேற்கும் சி.எஸ்.கே அணியின் ஜெர்சியை கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிமுகப்படுத்தி வைத்தார்.
ஐ.பி.எல் 2021 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 10-ம் தேதி மும்பையில் நடைபெறும் போட்டியில் சென்னை – டெல்லி அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரை முன்னிட்டு கேப்டன் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஐ.பி.எல் 2021 தொடருக்கான சி.எஸ்.கே ஜெர்சியை தோனி அறிமுகப்படுத்தும் வீடியோவை சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சி.எஸ்.கே அணிக்கே உரித்தான மஞ்சள் நிற சிறுடையில் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஜெர்சியின் தோள்பட்டையின் இரண்டு பக்கத்திலும் ராணுவ உடைக்கான பிரேத்யேக ‘camouflage’ பட்டை இருக்கிறது. இந்திய ஆயுதப்படையினரின் தியாகத்தை போற்றும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.கே அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதை குறிக்கும் விதமாக லோகோவிற்கு மேலே 3 ஸ்டார்கள் இடம்பெற்றுள்ளன.
புதிய ஜெர்சி குறித்து அணியின் தலைமை அதிகாரி விஸ்வநாதன் கூறுகையில், “நாட்டின் உண்மையான ஹீரோக்களுக்கு எங்களது பாராட்டை வெளிப்படுத்தும் விதமாக இதனை செய்துள்ளோம். நீண்ட நாட்களாக இது குறித்து ஆலோசனை செய்து வந்தோம். தற்போது அது நிறைவேறி உள்ளது“ என்றுள்ளார்.