அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்க ஆமதாபாத் மற்றும் ஆக்ரா நகரங்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்நிலையில், அதிபர் ட்ரம்ப்புடன் அவரது மகள் இவான்காவும் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் திங்கள்கிழமை முதல்முறையாக இந்தியா வருகிறார்.

அதிபர் ட்ரம்ப்பின் 36 மணி நேர இந்திய சுற்றுப்பயணம் ஆமதாபாத்தில் தொடங்கி ஆக்ரா வழியாக டெல்லியில் முடிவடைகிறது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகை தரும் ட்ரம்ப்பை வரவேற்க முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதிபர் ட்ரம்ப் சாலை வழியாக 22 கிலோ மீட்டர் பயணம் செய்வதால், அவர் செல்லும் பாதையில் 50 இடங்களில் மேடைகள் அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

எனவும், வழியெங்கும் அழகுபடுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வரவேற்பில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையைப் பெற்றுள்ள மொடாரா மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே ட்ரம்ப் என்ற நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்கிறார்.

அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இணைந்து மொடாரா மைதானத்தை திறந்து வைக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது, மைதானத்தின் திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்திற்கு ட்ரம்ப் செல்வது உறுதி செய்யப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் கொலொரோடாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அதிபர் ட்ரம்ப், அகமதாபாத் நகரில் தன்னை வரவேற்க 70 லட்சம் பேர் வருகை தருவார்கள் என தெரிவித்தார்.

உலகில் அதிக வரிவிதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என இந்த நிகழ்ச்சியில் ட்ரம்ப் பேசியிருப்பதும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, வதோதராவைச் சேர்ந்த 14 வயது மாணவர் மிஹிர், அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடியை இணைத்து வரைந்த ஓவியம் வரவேற்பை பெற்றுள்ளது.

அதிபர் ட்ரம்பை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், ஓவியத்தை அவருக்கு பரிசளிப்பேன் என அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் நிகழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் காதல் சின்னத்தை, தனது காதல் மனைவியுடன் கண்டுகளிக்க ட்ரம்ப் செல்வதையொட்டி, தாஜ்மகாலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதிபர் ட்ரம்ப்பின் இந்திய சுற்றுப்பயணத்தில் அவரது மகள் இவான்கா ட்ரம்ப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னரரும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே