வாக்கு எண்ணிக்கை அன்று முழு ஊரடங்கு இல்லை – சத்யபிரதா சாகு அறிவிப்பு..!!

தமிழகத்தில் வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அன்றைய தினம் முழு ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் பொருந்தாது எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் இரவு 9 மணிக்கு மேல் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மாநிலத்தில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினமும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா எனக் கேள்வி நிலவியது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் பொருந்தாது எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

தமிழகம், புதுவை, கேரளா உட்பட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே