ஜே.என்.யூ போராட்டத்தில் கலந்துகொண்ட தீபிகா படுகோன்..

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கலந்துகொண்டார்.

நடிகை தீபிகா படுகோன் நடித்து வரவுள்ள “சபாக்” திரைப்படத்தை விளம்பரப்படுத்த தலைநகரில் உள்ளார்.

ஜே.என்.யு.வில் நடைபெற்ற வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்த பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்றார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் ஆசாதி கோஷங்களை எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற நடிகை தீபிகா படுகோன் ஜே.என்.யு.வின் தற்போதைய மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷை கட்டி அணைத்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் அவர் கூட்டத்தில் உரையாற்றாமல் சென்றபோது, அய்ஷி கோஷ், நீங்கள் ஒரு நிலையில் இருக்கும்போது நீங்கள் பேச வேண்டும் என்று கூறினார்.

இன்று காலை நடிகை தீபிகா படுகோன் மக்கள் வெளியே வந்து அச்சமின்றி குரல் எழுப்புவதைப் பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

திங்கள்கிழமை இரவு, பாலிவுட் பிரபலங்களான இயக்குனர்கள் விஷால் பரத்வாஜ், அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர் மற்றும் நடிகர்கள் தாப்ஸி பன்னு மற்றும் ரிச்சா சாதா ஆகியோர் மும்பையின் கார்ட்டர் சாலையில் ஜே.என்.யு.வில் நடந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு ஆதரவாக திரண்டனர்.

நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட அமைதியான கூட்டத்தில், நடிகர்கள் ஸ்வாரா பாஸ்கர், தியா மிர்சா மற்றும் அலி ஃபசல் மற்றும் சுதிர் மிஸ்ரா, அனுபவ் சின்ஹா, ராகுல் தோலாகியா மற்றும் நீரஜ் கய்வான் உள்ளிட்ட முக்கிய நபர்களுடன் திரைப்படத்துறையினர் முன்னணியில் இருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே