ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும்போதுதான் மன நிறைவாக இருக்கிறது – பிரதமர் மோடி..

பிரதமர் மோடி ஜெய்சால்மரில் உள்ள ராணுவ வீரர்களோடு இணைந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்.

நாடு முழுவதும் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து,இனிப்புகள் பரிமாறி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், கரோனா காரணமாக சில இடங்களில் எளிய முறையில் தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள லோங்கேவாலாவில் இந்திய ராணுவத்தினருடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்.

லோங்கேவாலாவில் இந்திய ராணுவத்தினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும்போதுதான் எனக்கு மன நிறைவாக இருக்கிறது.

பனிமலையோ, பாலைவனமோ ராணுவ வீரர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்குதான் என்னுடைய தீபாவளி.

இமயமலையின் சிகரங்கள், கடுமையான பாலைவனங்கள், அடர்ந்த காடுகள் அல்லது ஆழமிகு கடல்கள் என எதுவாயினும் உங்கள் வீரம் எப்போதும் ஒவ்வொரு சவாலிலும் வெற்றி பெற்றுள்ளது.

உங்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பார்க்கும்போது என் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. ராணுவ வீரர்களைப் பெருமைப்படுத்த மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்.

மக்களுடைய அன்பை, வாழ்த்தை நான் உங்களுக்காகக் கொண்டு வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே