குழந்தைகளின் இளம்பருவத்தில் இருந்து இணை உணவாக பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்தும் பட்சத்தில், அக்குழந்தைகள் உணவுகளை சாப்பிடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பெற்றெடுத்த குழந்தைகளுக்கு நான்கு மாதங்கள் முடிந்துவிடும் தருணம் வந்தாலே, இன்றுள்ள பெரும்பாலான தாய்மார்கள் தாய்ப்பால் போதவில்லை என்று எண்ணி, இணை உணவாக குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுக்க தொடங்குகின்றனர். இதனால் குழந்தையின் பசி தீரும் என்றும் எண்ணுகின்றனர். ஆனால், இது மிகப்பெரிய தவறான விஷயம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பிஸ்கெட் தயாரிப்பின் போது மூலப்பொருள் என்ற பெயரில் கோதுமை மற்றும் மைதா மாவு அதிகாகமாக சுத்திகரிக்கப்படும். சுத்திகரிக்கப்படும் கோதுமை மாவு மற்றும் மைதா மாவு உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும்.
மிருதுவாக பிஸ்கெட் இருக்க குளூட்டன் சேர்க்கப்படும். குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட் மற்றும் நிறமிகள் போன்றவையும் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஹைட்ரஜன் கொழுப்பு சேர்க்கப்படுகிறது.
இதனைத்தவிர்த்து, கிரீம் பிஸ்கெட்டில் ஆரஞ்சு பிளேவர், சாக்லேட் பிளேவர் போன்றவையும் கிடைக்கிறது. பிளேவர்கள் என்பது செயற்கையாக செய்யப்படுவது தான். இதனால் பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகளுக்கு பசி இருக்காது.
பிஸ்கெட்டின் பிரதான வேலை பசியை அடக்குவது தான். அதனால் குழந்தைகளுக்கு இயன்றளவு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என்றும் கூறுகின்றனர்.
சிறுவயதில் இருந்து பிஸ்கட் சாப்பிட்டு வரும் குழந்தைக்கு செரிமான பிரச்சனை, குடல் பிரச்சனை ஏற்படலாம். தாய்மார்கள் இரண்டு பிஸ்கெட் தானே குழந்தைக்கு கொடுக்கிறோம் என்று நினைத்தால், ஊட்டச்சத்து துளியும் இல்லாத உணவை நாம் கொடுக்கிறோம் என்று நினைத்துப்பாருங்கள். உங்களுக்கே விஷயம் புரியும்.