குற்றால அருவிகளில் வருகிற 20 ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டியிருக்கும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த தடை அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. டிசம்பர் 20ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள், ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றில் குளிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” குற்றாலம் அருவியில் வருகிற 20.12 .2021 முதல் அனைத்து அருவிகளிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதேசமயம் சில நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
- மேலும், பாதுகாப்பான கிருமி நீக்கம் செய்யப்பட்ட சுத்தமான சுற்றுப்புறம் பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் தயார் செய்யப்பட வேண்டும்.
- குறைந்தபட்சம் 2 மீட்டர் இடைவெளியில் சுற்றுலா பயணிகள் நிறுத்தப்படவேண்டும்.
- இடைவெளியுடன் நிற்பதற்கு தேவையான இடங்களில் குறியீடு செய்யப்பட வேண்டும்.
- காய்ச்சல் கண்டறியும் கருவியை கொண்டு பொதுமக்களும் பணியாளர்களும் தவறாது சோதனை செய்துகொள்ள வேண்டும்.
- பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
- பேரருவி: ஒரே நேரத்தில் பத்து 10 ஆண்கள் 6 பெண்கள்.
- ஐந்தருவி: ஒரு நேரத்தில் 10ஆண்கள் மற்றும் 10 பெண்கள்.
- பழைய குற்றாலம் அருவி: ஒரு நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
- நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டும்.
- போதுமான கிருமி நாசினிகள் இருப்பு வைத்திருக்க வேண்டும் .
- தொற்று சந்தேகம் உள்ள சுற்றுலா பயணிகளை தற்காலிகமாக தனிமைப்படுத்த வசதிகள் செய்யப்பட வேண்டும் .
- சிசிடிவி கேமரா மூலம் பயணிகள் வருகை கண்காணிக்கப்பட வேண்டும்.
என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.