#coronavirus : சீனாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது அமெரிக்காவிலும் இந்த வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் யுஹான் நகரில் நிமோனியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் மக்களிடம் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை 291 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 54 பேர் இந்த வைரஸ் தொற்றிற்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Corona Virus

இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸ் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் யுஹானில் இருந்து வாஷிங்டன் வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்கா வந்த அந்த நபர் மருத்துவ சோதனைக்குட்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு அந்நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வூஹான் நகரில் இருந்தும் ஹாங்காங்கில் இருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்காவின் நியுயார்க், சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Corona Virus

எவரெட் பகுதியில் உள்ள மருத்துவ மையத்தில் அவர் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக் கூடியது என்பதால் அமெரிக்காவில் வேறு யாருக்காவது இந்த வைரஸ் தொற்று உள்ளதா என கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதே போல் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் பாதிப்பை ஆய்வு செய்து சர்வதேச அளவில் இதனை சுகாதார அவசர நிலையாக அறிவிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே