டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறையினர் அவ்வப்போது தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் புதிதாக 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் கடந்த மாதம் 13 – 15ம் தேதிகளில் டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலிருந்து சுமார் 1,500 பேர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டது தெரியவந்துள்ளது.
அவர்களில் தமிழகத்திலிருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேர் மட்டுமே தமிழகம் திரும்பியிருப்பதாகவும், 523 பேரை தவிர மீதமுள்ளவர்களை கண்டறியும் பணி நடந்துவருகிறது எனவும் நேற்று பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
616 பேரை கண்டறியும் நடைபெற்று வருவதாகவும், இவர்களின் அலைபேசிகள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தாமகவே முன்வந்து சுகாதாரத்துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் இன்று புதிதாக 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாகவும், அவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் எனவும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் கண்டறியப்பட்டு இரவு பகலாக பரிசோதனை நடைபெற்று வருகிறது, தமிழகத்தில் 77,300 பேர் வீட்டுக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கண்டறியப்பட்டவர்கள் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் உள்ளனர் எனவும் பீலா ராஜேஷ் கூறினார்.
மாவட்ட வாரியாக இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள்:
1. கோவை – 28
2. தேனி – 20
3. திண்டுக்கல் – 17
4. மதுரை – 9
5. திருப்பத்தூர் – 7
6. செங்கல்பட்டு – 7
7. நெல்லை – 6
8. சிவகங்கை – 5
9. ஈரோடு – 2
10. தூத்துக்குடி – 2
11. திருவாரூர் – 2
12. காஞ்சிபுரம் – 2
13. கரூர் – 1
14. சென்னை – 1
15. திருவண்ணாமலை – 1