2-வது டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் சுகாதார அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் சுகாதார அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தில் காந்திநகர் பகுதியில் தேகாம் தாலுகாவை சேர்ந்த சுகாதார அதிகாரி ஒருவர் கடந்த ஜனவரியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.  பின்னர் 2வது டோஸ் தடுப்பூசி கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அவருக்கு செலுத்தப்பட்டது. சமீபத்தில் அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது.  இதனால் அவரது மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.  அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுபற்றி தலைமை சுகாதார அதிகாரி சோலங்கி கூறுகையில், ”லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட அந்த அதிகாரி வருகிற திங்கட்கிழமை பணியில் சேர தயாராக உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், ”கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தப்பட்ட பின்னர் உடலில் ஆன்டிபாடிகள் உற்பத்தியாக பொதுவாக 45 நாட்கள் எடுக்கும்.  அதனால் பாதுகாப்பிற்காக, தடுப்பூசி போட்டப்பட்ட பின்னரும் சமூக இடைவெளி உள்பட அனைத்து கொரோனா தடுப்பு விதிகளையும் பின்பற்றுவதுடன் முக கவசமும் அணிய வேண்டும்” என்றார். 

இதேபோல், சில தினங்களுக்கு முன்பு மராட்டிய மாநிலம் நாக்பூர் காம்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றிவந்த 42 வயதான செவிலியர் ஒருவர், 2-வது டோஸ் தடுப்பு மருந்து போட்டபிறகும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே