கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் நாடு முழுவதும் 168 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பயம் காரணமாக பொது போக்குவரத்தை தவிர்க்கும் பொருட்டு மக்கள் பயணம் செய்வதைக் குறைத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ நெருங்குகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன.

பல சுற்றுலாத்தளங்கள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

மக்கள் பெருமளவில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது, நாடு முழுவதும் நாளை முதல் 168 ரயில்களை ரத்து செய்யப்போவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மற்றும் ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டு வருகின்றன.

ரயில் நிலையங்களில் பயணிகளை மட்டுமன்றி அவா்களை வழியனுப்பவரும் உறவினா்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை பயணச்சீட்டு கட்டணம் ரூ.10இலிருந்து ரூ. 50ஆக தற்காலிகமாக உயா்த்தப்பட்டது.

மேலும், தேவையில்லாத பயணத்தை தவிா்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால், ரயில்களில் பயணிப்பவா்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து போனது. இதனால், ரயில்களின் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக, பல ரயில்களில் இருக்கைகள் காலியாகியுள்ளன. பயணிகள் வருகை குறைந்ததால் நாடு முழுவதும் 168 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்திருந்த பயணிகள், டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததால் நாளை முதல் மார்ச் 31 வரை இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே