இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி..!!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

375 ரன்கள் என்கிற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணியில் ஷிகர் தவண், மயங்க் அகர்வால் இருவரும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர்.

முதல் ஓவரில் ஸ்டார்க் வைட், நோபால் என்று தாராளமாக வீசி 20 ரன்களை வாரி வழங்கினர்.

அடுத்தடுத்த ஓவர்களில் தொடக்க வீரர்கள் இருவரும் பவுண்டரிகள் விளாச 5-வது ஓவரின் முடிவிலேயே 53 ரன்களை இந்தியா சேர்த்தது.

6-வது ஓவரில் மயங்க் அகர்வால் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின் ஆட வந்த கோலி முதல் சில பந்துகள் நிதானித்துப் பின் அவரும் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். 

9 ஓவர்களில் ஓவருக்கு 8 ரன்களுக்கு அதிகமாக அடித்து ஆடிக் கொண்டிருந்த இந்திய அணிக்கு 10-வது ஓவரில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

ஹாஸல்வுட் வீசிய இந்த ஓவரின் 3-வது பந்தில் கோலியும் (21 ரன்கள்) 5-வது பந்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் (0) ஆட்டமிழந்தனர்.

கே.எல்.ராகுலும் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க 14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 103 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதன்பின் ஜோடி சேர்ந்த ஷிகர் தவணும், ஹர்திக் பாண்டியாவும் தங்களின் அட்டகாசமான அதிரடி ஆட்டத்தால் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். ஆஸ்திரேலிய அணி தவறவிட்ட கேட்ச்களும் இந்தியாவுக்குச் சாதகமாக இருந்தன.

ஓவருக்கு ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர், இல்லாவிட்டால் சேர்த்து வைத்து ஒரே ஓவரில் 2-3 பவுண்டரிகள் என இந்த இணை ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிதறடித்தது.

இருவரும் ஒரு கட்டத்தில் 374 என்கிற இலக்கை எளிதில் எட்டி விடலாம் என்றே ரசிகர்களை நினைக்க வைத்தனர்.

தவணுக்குப் பின் இறங்கிய ஹர்திக் பாண்டியா ரன் சேர்ப்பில் அவரை முந்திச் சென்றார்.

இருவரும் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில் 128 ரன்களைக் குவித்தனர். 35-வது ஓவரில் ஷிகர் தவண் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆட வந்த ரவீந்திர ஜடேஜாவால் அதேபோன்ற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இந்தியாவிடம் பேட்ஸ்மேனின் விக்கெட்டுகள் மீதமில்லாததும் ஆடுபவர்களுக்கு அழுத்தத்தைத் தந்தது.

39-வது ஓவரில் 90 ரன்களுக்கு (76 பந்துகள், 7 பவுண்டரி, 4 சிக்ஸர்) பாண்டியா ஆட்டமிழக்க, இந்தியாவின் வெற்றி பெறும் நம்பிக்கை தகர்ந்தது.

சம்பிரதாயமாகத் தொடர்ந்த அடுத்தடுத்த ஓவர்களில் அதிகமாக ரன் சேர்க்காமல் விக்கெட்டையும் இழக்காமல் இந்திய பேட்ஸ்மேன்கள் இருவரும் ஆடி வந்தனர்.

ஜடேஜா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷமி, சைனி என இருவரும் சிக்ஸர், பவுண்டரி என அதிரடி காட்டினாலும் அது அந்தக் கட்டத்தில் இந்திய அணிக்குப் போதுமானதாக இல்லை.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

ஆட்டநாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலிய அணி 374 ரன்களைக் குவித்தது.

அந்த அணியின் கேப்டன் ஃபின்ச் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சதமடித்தனர்.

அடுத்த ஒரு நாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே