தொடர்ந்து 6-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேல் கரோனாவில் பாதிப்பு: சிகிச்சை பெறுவோர் 2.23 லட்சமாக அதிகரிப்பு

இந்தியாவில் கரோனா வைரஸால் தொடர்ந்து 6-வது நாளாக நேற்றும் 20 ஆயிரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கரோனாவில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2.23 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 492 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 14 லட்சத்து 9 ஆயிரத்து 831 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி 26,624 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். அதன்பின் நேற்று அதே அளவுக்கு அதிகரித்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 432 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 96.65 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து இதுவரை ஒரு கோடியே 10 லட்சத்து 27ஆயிரத்து 543 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் சதவீதம் 1.39 ஆகச் சரிந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா மூலம், மகாராஷ்டிராவில் 48 பேரும், பஞ்சாப்பில் 27 பேரும், கேரளாவில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரை 52,909 பேரும், தமிழகத்தில் 12,551 பேரும், கர்நாடகத்தில் 12,397 பேரும் உயிரிழந்துள்ளனர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே