கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்..!!

தமிழக சுகாதாரத் துறையினரிடம் கையிருப்பில் 2000 டோஸ்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி உள்ளதால் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களாகவே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவருகிறது. மத்திய அரசிடம் இருந்து கடந்த 4-ம் தேதி 50,000 டோஸ் கொரோனா தடுப்பூசி மட்டுமே கிடைக்கப்பெற்றது. அவற்றில் தற்போது 2,000 டோஸ் மட்டுமே எஞ்சியிருப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணி முடங்கியுள்ளது.

தமிழ்நாட்டுக்கு இதுவரை மத்திய அரசிடமிருந்து 1,01,63,960 டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் 97,35,420 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் அதிகமான அளவு தடுப்பூசி உற்பத்தி செய்யமுடியாத காரணத்தால் மத்திய அரசு உற்பத்தியாகும் கொரோனா தடுப்பூசிகளை பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கிவருகிறது.

அந்த வகையில் ஜூன் மாதத்துக்குத் தேவையான தடுப்பூசிகள் தமிழகத்திற்கு இன்னும் வராத காரணத்தால் மாநிலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்கட்டமாக 45 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது 18 வயது முதல் 45 வயதினருக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் பொதுமக்கள் தற்போது ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகப் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளமுடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதன்காரணமாக பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி இல்லை என பெயர் பலகைகளை வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய கொரோனா தடுப்பூசி வரும் 10-ம் தேதிதான் வரவுள்ளதால் அதுவரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே