கொரோனா தடுப்பூசி – மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்..!!

கோவிட்-19 தடுப்பூசியைத் தயாரிக்கும் 3 குழுக்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

கோவிட்-19 தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று குழுக்களுடன் திங்கட்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்திற்கு பிரதமர் காணொலி வாயிலாகத் தலைமை வகித்தார்.

இந்தக் குழுக்கள் புனேவின் ஜெனோவா பயோஃபார்மா, ஹைதராபாத்தின் பயாலாஜிக்கல் ஈ‌ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தவையாகும்.

கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியைத் தயாரித்துவரும் இந்த நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் பணிகளைப் பிரதமர் பாராட்டினார்.

தடுப்பூசியை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ள பல்வேறு தளங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் அது சம்பந்தமான விஷயங்கள் குறித்து நிறுவனங்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

தடுப்பூசியின் செயல்திறன் உள்ளிட்ட தன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எளிதான மொழியில் தெரிவிக்க கூடுதல் சிரத்தையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தளவாடங்கள், போக்குவரத்து, குளிர்பதன வசதி கொண்ட நிலையங்கள் போன்ற தடுப்பூசியை வழங்கும் விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அனைத்துத் தடுப்பூசிகளும் சோதனைகளின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.

இதுகுறித்த விரிவான தரவு மற்றும் முடிவுகள் அடுத்த ஆண்டின் தொடக்கம் முதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளால் நாடும் உலகமும் சிறந்த பயனைப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை வழங்கினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே