தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடையே காணொலி வாயிலாக ராகுல் காந்தி பேச்சு..!!

தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கான வெற்றி பிரகாசமாக உள்ளது என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் காணொலி மூலம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருவதால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தல் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை தொடங்கியதோடு பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற திமுக தலைமையிலான கூட்டணியில் நீடித்து வருகிறது.

சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளை ஆய்வு செய்யவும், சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வது குறித்தும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கான வெற்றி பிரகாசமாக உள்ளது.

தமிழகத்தில் 50 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமையான கட்சி காங்கிரஸ். கடுமையான உழைப்பை செலுத்துவதன் மூலம் கட்சி மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

அதிமுக ஆட்சியால் பாதிக்கப்படும் மக்களுக்கு விரைவில் விடிவு ஏற்படும் என்றார்.

இந்த ஆலோசனையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் மற்றும் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே