பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 42 வயதான மேக்ரான், கொரோனா அறிகுறி காரணமாக 7 நாட்கள் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

உலக தலைவர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

பொலிவியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

பிரேசில் அதிபர் போல்சனரோ, ஓங்குராஸின் ஜனாதிபதியும் கொரோனா தொற்றுக்கு ஆளானார்.

தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இவர்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்டு குணமடைந்தனர்.

இவ்வாறு பல தலைவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கொரோனா அறிகுறி தென்பட்டவுடன் மேக்ரான் பரிசோதனை செய்து கொண்டார். அதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனால், அவர் 7 நாட்கள் தன்னை தானே தனிமைபடுத்தி கொண்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே அரசுப் பணிகளை மேக்ரான் மேற்கொள்வார் எனக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேக்ரானுக்கு, என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட்டது என்பது குறித்த தற்போது வரை தகவல் வெளியிடப்படவில்லை.

பிரான்சில் கொரோனா இரண்டாவது அலையை எதிர்த்து போராடுவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், இந்த வார துவக்கத்தில் தளர்த்தப்பட்டன.

அதே சமயம் தொற்று எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. எனவே, நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் நடைமுறைக்கும் வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே