தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா அதே வேகத்தில் குறைந்து வருகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

தமிழகத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களே இல்லை என்ற நிலை மிக விரைவில் ஏற்படும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், இன்று (ஜூன் 02) சென்னை தலைமைச் செயலகத்தில், சென்னை தொழில் வர்த்தக சபை உறுப்பினர்கள் சார்பாக ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான 72 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொழில் முனைவோர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சேவை மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மனிதாபிமானத்துடன் கரோனா பேரிடர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

கரோனா பேரிடர் நிவாரண உதவிகள் வழங்குவது ஒரு மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று சென்னை வர்த்தக சபை உறுப்பினர்களான ஸ்டால் இந்தியா பி.லிட்., சிட்டி யூனியன் வங்கி, காக்னிசன்ட் பவுண்டேஷன், பாராமவுண்ட் ஷிப்பிங், ஈசன் எம்.ஆர்.டேப் சேஞ்சர்ஸ், எம்.பி. மெட்டாலிக் பெல்லௌஸ் மற்றும் சாய் கேதார் அறக்கட்டளை ஆகியவை இணைந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 72 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளன. இது 72 படுக்கைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் வசதிகளை தரக்கூடியது. இதற்காக அந்நிறுவனங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் தற்பொழுது கரோனா பெருந்தொற்றின் வேகம் படிப்படியாக, வேகமாகக் குறைந்து வருகிறது. அந்தவகையில், ஒரு மகிழ்ச்சியான அறிகுறி என்னவென்றால், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்களைவிட குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

முதல்வரால் எடுக்கப்பட்ட தீவிர முயற்சியின் காரணமாக தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்காக காத்திருந்த நிலை இருந்தது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் நேற்று இரவு நிலவரப்படி, அரசு மருத்துவமனைகளில் 8,072 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், 16,444 சாதாரண படுக்கைகள், 618 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் என 25,134 படுக்கைகள் காலியாக உள்ளன.

இவை மேலும் உயர்ந்து ஒட்டுமொத்தமாக மருத்துவமனைகளில் கரோனா தொற்று பாதித்தவர்களே இல்லை என்ற நிலை மிக விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும், ஜூன் மாதத்திற்கென மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டுக்கென ஒதுக்கியிருப்பதாகச் சொல்லப்படுவதும், தமிழக அரசின் மூலம் பணம் செலுத்தி பெற இருக்கின்ற தடுப்பூசிகளோடு சேர்த்து 42 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப இருக்கிறார்கள்.

அதில், முதல் கட்டமாக நேற்று மாலை 5 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை நேற்று இரவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், மக்கள்தொகை அளவுக்கேற்பவும் மற்றும் கரோனா தொற்றின் அளவுக்கேற்பவும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.

தற்பொழுது தடுப்பூசி இருப்பு என்பது 6.50 லட்சம் அளவில் உள்ளது. அவை மேலும் 4 நாட்கள் வரை செலுத்த முடியும். மத்திய அரசின் தொகுப்பிலிருந்து படிப்படியாகத் தடுப்பூசிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் தமிழக மக்களுக்குத் தடையில்லாமல் தடுப்பூசி செலுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்”.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே