கொரோனா நிவாரண நிதி – வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்..!!

கரோனா நிவாரணத் தொகையாக முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று (10-ம் தேதி) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஏப்.7-ம் தேதி பதவியேற்றுக்கொண்டது. அன்றே கரோனா நிவாரண நிதிக்கு முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் ரூபாய் என்பன உள்ளிட்ட 5 முக்கியக் கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அனைவரும் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா நிவாரணத் தொகையாக முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று (10-ம் தேதி) தொடங்கி வைத்தார். 

அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. கூட்டத்தைத் தவிர்க்க இதற்கான டோக்கன்கள் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி 3 நாட்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, 15-ம் தேதி முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2,000 வழங்கும் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி அட்டை வைத்துள்ள சுமார் 2.07 கோடி பேருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும். அட்டைதாரரின் குடும்பத்தில் யார் வேண்டுமானாலும் ரேஷன் கடைக்குச் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தினந்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்தப் பணம் வழங்கப்படும்.

ஒரு நாளைக்கு 200 அட்டைதாரர்களுக்கு இந்தப் பணம் வழங்கப்பட உள்ளது. டோக்கனில் பணத்தைச் சென்று பெற்றுக்கொள்ள வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

முன்னதாக 8-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ”அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் பணம் முறையாகச் சென்று சேரும். அதைக் கண்காணிக்கும் முழுப் பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கெனத் துணை வட்டாட்சியர், பிடிஓ தலைமையில் தனிக் குழுவும் விரைவில் அமைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே