கொரோனா வைரஸின் பிடி இறுகி வரும் வகையில் இந்தியாவில் உயிர் பலி 13 ஆக அதிகரித்துள்ளது, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

தமிழகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கரோனாவுக்கு தலா ஒரு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

குஜராத்தில் உயிரிழப்பு 3 பேராகவும், மகாராஷ்டிராவில் 4 ஆகவும் பதிவாகியுள்ளது.

உலகம் முழுவதையும் நடுங்க வைத்து வரும் கொரோனா அரக்கனுக்கு எதிரான போரில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்தியாவிலும் கொரோனாவை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான தடுப்பு நடவடிக்கையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளன.

இருப்பினும் உயிரிழப்பும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்கும் வகையில்தான் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதை ஏற்று மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும், உயிரிழப்பு குறித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 649 பேராக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. காஷ்மீரில் இன்று, முதல் உயிரிழப்பும், மத்தியப் பிரதேசத்தில் முதல் உயிரிழப்பும் நடந்துள்ளது.

கோவா மாநிலத்தில் 33 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே