தஞ்சையில் பரபரப்பு..; ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா..!!

தஞ்சாவூர் அருகே 20 பள்ளி மாணவிகளுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் 36 மாணவிகளுக்கு அங்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 16 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து அனைத்து பள்ளிகளிலும் இருக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாணவர்களும் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 8 ஆம் தேதி முதல், ஒரு மாணவி பள்ளிக்கு வரவில்லை. 

அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அது குறித்து விசாரித்த பொழுது மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவருவது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்து, கடந்த 11ஆம் தேதி 460 மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் நேற்று முதல்கட்டமாக 20 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 4 மாணவிகள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவில் மேலும் 36 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது அங்கு பரபரப்பை கூட்டியுள்ளது.

அனைத்து மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே