பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாட்களில் 262 மாணவர்களுக்கும்,160 ஆசிரியர்களுக்கும் கொரோனா..!!

ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு 3 நாட்கள் ஆன நிலையில் (2-ம் தேதி) 262 மாணவர்கள் மற்றும் 160 ஆசிரியர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கரோனா தொற்று குறைந்ததால், பள்ளி, கல்லூரிகளை நிபந்தனைகளுடன் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியது.

இதனால் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூனியர் கல்லூரிகளும் நவ.2-ம் தேதி திறக்கப்பட்டன. இதில் சுமார் 40 சதவீத மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்கு வரத் தொடங்கினர்.

முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட விதிமுறைகளை ஆசிரியர்களும் மாணவர்களும் பின்பற்றி வருகின்றனர். 

எனினும் 3 நாட்களில் 262 மாணவர்கள் மற்றும் 160 ஆசிரியர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சின்ன வீரபத்ருடு, ”நேற்று (நவ.4) 4 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதில் 262 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது 0.1 சதவீதம் கூட இல்லை. அது மட்டுமல்லாமல் அவர்கள் பள்ளிக்கு வந்ததால்தான் தொற்று ஏற்பட்டது என்று கூற முடியாது. எனவே இந்தத் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.

1.11 லட்சம் ஆசிரியர்களில் 99 ஆயிரம் பேர் புதன்கிழமை அன்று பள்ளிக்கு வந்தனர்.

இவர்களில் 160 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எங்களுக்கு மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்கிறோம்.

ஏழை மற்றும் பெண் குழந்தைகளுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே