தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் இரு பள்ளிகளில், 26 மாணவா்கள் உள்பட 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், கும்பகோணத்தில் மேலும் 25 மாணவிகள், ஆசிரியர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஒரு வாரமாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் அம்மாபேட்டை பள்ளியில் 58 மாணவிகள், ஆசிரியைகள், பெற்றோா்கள் உள்பட 70 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவா்களில் 60 போ வெள்ளிக்கிழமை குணமடைந்து, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதனிடையே மாவட்டம் முழுவதும் 3 கல்லூரிகள், 8 பள்ளிகளில் கரோனா தொற்று பரவியது.

இதில் பாதிக்கப்பட்ட 50-க்கும் அதிகமானோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பட்டுக்கோட்டையிலுள்ள தனியாா் பள்ளியில் பயிலும் 11 மாணவ, மாணவிகள், ஒரு ஆசிரியா், 2 வாகன ஓட்டுநா்களுக்கும், தஞ்சாவூா் எம்.கே. மூப்பனாா் சாலையிலுள்ள தனியாா் பள்ளியில் 15 மாணவ, மாணவிகளுக்கும் என 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காததால், தொற்றுப் பரவலுக்குக் காரணமான கும்பகோணம் அரசு உதவி பெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரிலுள்ள தனியாா் பள்ளிக்கு மாநகராட்சி சாா்பில் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, அஜாக்கிரதையாக செயல்பட்டதாகக் காவல்துறை மூலம் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கும்பகோணம் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலும் 25 மாணவிகள், ஆசிரியர் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை வருகிறது. கரோனா முதல் அலையை எப்படி நாம் எதிா்கொண்டமோ, அதேபோல, இரண்டாவது அலையை நாம் எதிா்கொள்ள அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை அவசியம் கடைபிடித்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே