இப்படியும் வீட்டிற்குள் வரும் கொரோனா; என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

சக மனிதனை தொடுவதில் கூட சிக்கல் இருக்கிறது என்கிற நிலைப்பாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மாதிரியான நேரத்தில் “சும்மாவே எக்கச்சக்கமான கிருமிகளை சுமக்கும்” ஸ்மார்ட்போன்களால் கொரோனா வைரஸையும் வீட்டிற்குள் கொண்டு வர முடியுமா…
கடந்த 2017 இல் அமெரிக்க மருத்துவ இதழில் (American medical journal) ஒரு கவனிக்க வேண்டிய ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. அந்த ஆய்வின்படி, ஸ்மார்ட்போன் வழியாக (பயன்பட்டால்) ஏராளமான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் நமக்குள்ளும் நமது வீட்டிற்குள்ளும் நுழைகிறது என்பது தெரியவந்தது.
அப்போது அந்த ஆய்வு தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை, ஆனால் இப்போது உலகம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு உட்பட்டிருக்கும் நேரத்தில், அந்த குறிப்பிட்ட ஆய்வை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளோம்.
ஏனெனில் உங்கள் கேஜெட்களையும் ஸ்மார்ட்போன்களையும் மிகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டிய நேரம் இது. ஒருவேளை இப்போதே நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனை சுத்தம் செய்ய விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத 11 விஷயங்கள் இதோ:

  1. உங்கள் ஸ்மார்ட்போனை சுத்தம் செய்ய எந்தவிதமான ப்ளீச்சையும் (bleach) பயன்படுத்த வேண்டாம்.
  2. உங்கள் ஸ்மார்ட்போனை சுத்தம் செய்ய எந்த வினிகரையும் (vinegar) பயன்படுத்த வேண்டாம்.
  3. ஐபோன்களை சுத்தம் செய்ய ஸ்ப்ரே கிளீனர்களை (spray cleaners) நேரடியாக பயன்படுத்தக்கூடாது என்று ஆப்பிள் கூறுகிறது.
  4. நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்து உங்கள் ஸ்மார்ட்போனை எந்தவிதமான திரவத்திலும் நனைக்காதீர்கள்.
  5. உங்கள் ஸ்மார்ட்போனை சுத்தம் செய்ய ‘நேரடியான’ ஆல்கஹாலை (alcohol) பயன்படுத்த வேண்டாம்.
  6. உங்கள் ஸ்மார்ட்போனை சுத்தம் செய்ய 70% ஐசோபிரைல் ஆல்கஹால் (isopropyl alcohol) கொண்ட கிருமிநாசினி துடைப்பான்களை (disinfectant wipes) மட்டும் பயன்படுத்துங்கள்.
  7. உங்கள் ஸ்மார்ட்போனை சுத்தம் செய்யும் போது டிஸ்போஸபிள் கையுறைகளைப் (disposable gloves) பயன்படுத்துங்கள்.
  8. ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்ய, லென்ஸ்களை சுத்தம் செய்யும் துணியைப் போல மிகவும் மென்மையான, சற்று ஈரமான, பஞ்சு இல்லாத துணியைப் பயன்படுத்துங்கள்.
  9. அமெரிக்க தொலைத் தொடர்பு சேவை வழங்குநர் ஏடி அண்ட் டி கூறுகையில், ஒரு ஸ்மார்ட்போனின் மீது கிருமிநாசினிகளை தெளித்தபின் அதை துடைக்க காகித துண்டுகளை பயன்படுத்தப்படலாம்.
  1. ஐபி 68 மதிப்பீட்டில் (IP68 rating) கொண்ட மற்றும் நீர் எதிர்ப்பு சக்தி கொண்ட பிரீமியம் ஸ்மார்ட்போன்களை சோப்பு தண்ணீர் அல்லது ஹேண்ட் சேனிடைஸர் கொண்டு சுத்தம் செய்யப்படலாம்.
  2. நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை சுத்தம் செய்ய மேற்கண்ட எந்தவொரு வழிமுறையை பின்பற்றினாலும், உங்கள் தொலைபேசியை சுத்தம் செய்தவுடன் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு உங்கள் கைகளை கழுவுவதை மறக்க வேண்டாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே