தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த பத்து நாட்களுக்கு பிறகு 500க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை 65ஐ கடந்தது:

தமிழகத்தில் இன்று 2 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களில் 2 பேருமே சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் குணமடைந்தவர்களின் சதவிகிதம் 23.15% ஆக உள்ளது. இதுவரை 2,240 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது 7,365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.67% ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பு – பாலின வாரியான விவரம்

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 9,674 பேரில், 6,389 ஆண்கள், 3,282 பேர் பெண்கள், 3 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் இதுவரை 2,91,432 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 11,965 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் உயிரிழப்பு 40ஐ தாண்டியது:

சென்னையில் இன்று 300ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு. சென்னையில் 363 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,637 ஆக உயர்ந்ததுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்த 2 பேருமே சென்னையை சேர்ந்தவர்கள், இதன்மூலம் சென்னையில் மட்டும் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 81% பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:

தமிழகத்தில் இன்று அதிகளவாக சென்னையில் 363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

செங்கல்பட்டில் 09, திருவள்ளூரில் 15, திருவண்ணாமலையில் 08 பேரும் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு அந்த மாவட்டத்தில் 495 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், செங்கல்பட்டில் இன்று 09 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 430 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி:

இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும்; மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும்; அதே சமயம் எச்சரிக்கை தேவை என தெரிவித்தார்.

தமிழகத்தில் 20 கேன்சர் நோயாளிகள், 2 HIV நோயாளிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எனவே கொரோனா குறித்து வயதானவர்கள் அச்சப்படத்தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

மே மாத கொரோனா பாதிப்பு நிலவரம்:

மே 01 – 2526

மே 02 – 2757

மே 03 – 3023

மே 04 – 3550

மே 05 – 4058

மே 06 – 4829

மே 07 – 5409

மே 08 – 6009

மே 09 – 6535

மே 10 – 7204

மே 11 – 8002

மே 12 – 8718

மே 13 – 9227

மே 14 – 9674

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே